July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

“பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு”- மும்பையில் மு.க. ஸ்டாலின் பேச்சு

1 min read

“Our only goal is to defeat the BJP”- Mumbai MP. Stalin’s speech

17.3.2024
மும்பையில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு பேரறிஞர் அண்ணா எழுதிய மாபெரும் தமிழ்க்கனவு புத்தகத்தின் ஆங்கில பதிப்பை ராகுல்காந்திக்கு அவர் பரிசளித்தார்.
அந்த நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

எனது அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைக் கூறுவதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன். கன்னியாகுமரியில் அவரது இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்த பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன். உங்கள் பயணம் இன்று மும்பையை அடைந்துள்ளது. விரைவில் அது டெல்லியை எட்டும்! இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும்.
ராகுல் காந்தி அவர்கள் எங்குச் சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகிறார்கள். இந்தப் பயணத்தினிடையே அவர் பல இடர்களைப் பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி அவர்கள் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
சகோதரர் ராகுல் காந்திக்குக் கூடிய மக்கள் பெருந்திரள் பா.ஜ.க.வைத் தூக்கமிழக்கச் செய்தது. அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால் அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து முழங்கினார்.
இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம்.
இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.
பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்தி விட்டது. 6000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம் சாட்டுகிறார்.
நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்! இந்தியாவே எழுக.
இவ்வாறு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.