தென்காசி மாவட்டத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு
1 min read
Collector orders to hand over firearms in Tenkasi district
18.3.2024
தென்காசி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்களது துப்பாக்கியை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏகே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற அனைத்து உரிமைதாரர்களும், தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியை அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவது எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே. துப்பாக்கி உரிமதாரர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் உடனடியாக துப்பாக்கியை ஒப்படைக்க வேண்டும்.
அரசு உத்தரவு படி தங்களது துப்பாக்கியை காவல்துறை யினரிடம் ஒப்படை செய்யாமல் பதுக்கி வைத்திருந்தால் அத்தகைய நபர்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் ஒப்படைப்பில் வைக்கப்படும் படைக்கலன்கள் தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பிற்கு பின் உரிமதாரர்களிடம் திருப்ப ஒப்படைக்கப்படும். எனவே, தென்காசி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் துப்பாக்கி களை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்து ஒப்படைத்த விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்து மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே..கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2024-ம் ஆண்டு பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கிராமப்பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக முன்புற வாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் இட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.