நாடாளுமன்றத் தேர்தல் சுரண்டையில் போலீசார் அணிவகுப்பு
1 min read
Police march in parliamentary election campaign
20.3.2024
நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சுரண்டையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறையினர், துணை இராணுவப் படையினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது அனைத்து வாக்காளர்களும் எவ்வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போலீசார் துணை ராணுவ படையினர் ரயில்வே பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
அதன்படி தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுரண்டையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி திருமண மண்டபத்தில் புறப்பட்டு சுரண்டை பஸ் நிலையம், சுரண்டை பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்று அழகு பார்வதி அம்மன் கோவில் திடலில் முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து சுரண்டை இரட்டைக் குளம் பகுதியிலும் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் செந்தில், உதவி ஆய்வாளர் சின்னத்துரை, அலெக்ஸ் மேனன், சதீஷ், அன்னலட்சுமி, மற்றும் துப்பாக்கி ஏந்திய நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர் ரயில்வே போலீசார் காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.