தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்யும் -வானிலை மையம் தகவல்
1 min read
It will rain for 4 days in Tamil Nadu – Weather Center Information
10/4/2024
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 தினங்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பி்ல் கூறியிருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 24 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. இதர தமிழக பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.6 டிகிரி செல்சியஸ் (106.8 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் ஈரோட்டில் 40.0(104 டிகிரி பாரன்ஹீட்) செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளில் 33° 37° செல்சியஸ், புதுவையில் 34.5 டிகிரி செல்சியஸ், காரைக்கால் பகுதியில் 33.6′ செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 22.30டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.5 செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.12ம் தேதியை பொறுத்த அளவில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.13, ஏப்.14ம் தேதி தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.15ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.16ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்த அளவில், ஏப்.14ம் தேதி வரை ஐந்து இடங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
அடுத்த இரண்டு நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் சில இடங்களில் 2டிகிரி 3டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37′-40டிகிரி செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 32-37டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.