இந்தியாவின் முக்கிய நகரங்களில் ‘ரோடு ஷோ’ நடத்த மாலத்தீவு திட்டம்
1 min read
Maldives Plans to Hold ‘Road Show’ in Major Cities of India
12.4.2024
மாலத்தீவில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை விமர்சித்து மாலத்தீவு ஆளும் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாலத்தீவின் முன்னாள் அமைச்சர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய சுற்றுலாப்பயணிகள் பலரும் அந்நாட்டிற்கு செல்வதை தவிர்த்தனர். இதனால், மாலத்தீவின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலத்தீவு சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவில் ரோடு ஷோ நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாலேயில் உள்ள இந்தியத் தூதருடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், “முக்கிய இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்த உள்ளோம். மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலா சந்தையாக இருக்கும் அதே வேளையில், சுற்றுலாவை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளியாகவில்லை.