தமிழகத்திற்கு ரூ.10.76 லட்சம் கோடி கொடுத்ததாக பொய்க்கணக்கு-மத்தியஅரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min readM.K.Stalin accuses central government of giving fake accounts of Rs.10.76 lakh crore
14.4.2024
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!”, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பாஜக அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் இரண்டு கூறுகள் உள்ளன.
1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது. இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.
2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?
- இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,
- ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,
- சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று,
- ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!
தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.