May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகம்-கேரளா எல்லையில் பறவைக் காய்ச்சலை தடுக்க 12 இடங்களில் சோதனை

1 min read

Inspection at 12 places to prevent bird flu in Tamil Nadu-Kerala border

23.4.2024
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குட்ட நாட்டில் உள்ள வாத்து பண்ணையில் ஏராளமான வாத்துக்கள் கடந்த வாரம் உயிரிழந்தன. இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல், தமிழகத்திற்குள் வராமல் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி அருகே தமிழக கால்நடை துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதே போல் கோவை, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.

ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு கால்நடை உதவி ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் 2 ஷிப்டுகளாக பணியமர்த்தப்பட்டு தீவிர சோதனை செய்கின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. படந்தாலுமூடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் இருந்து கோழிகள் ஏற்றிவரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா சென்று விட்டு வரும் கோழிப் பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு உள்ள கோழிப்பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் போன்ற நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை, பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.