கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி
1 min readDismissal of petition seeking stay of Coimbatore election results
30.4.2024
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. இதேபோல, எங்கள் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என மனுதாரருக்கு கோர்ட்டு கேள்வி எழுப்பியது. வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என கூறிய நீதிபதிகள், கோவை தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.