May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை: கடிதத்தில் உள்ள நபர்களிடம் விசாரணை தீவிரம்

1 min read

Nellie District Congress President’s murder: Investigation of the persons in the letter intensified

6.5.2024
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங்(வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார்.

இதுகுறித்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் 3-ந்தேதி உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் தனது தந்தை எழுதி வைத்திருந்ததாக கடிதம் ஒன்றையும் போலீசில் அளித்தார்.

இந்நிலையில் ஜெயக்குமார் 4-ந்தேதி வீட்டுக்கு பின்னால் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஜெயக்குமார் உடலில் மின்சார வயர்கள் கட்டப்பட்டு இருந்தது. அவரது தலை பகுதியில் தொடங்கி இடுப்பு, கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வயர் கட்டப்பட்டிருந்தது. வயிற்றின் அடிப்பகுதியில் மரப்பலகை கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தில் மண்எண்ணை கொட்டிக்கிடந்ததும், காய்ந்த சறுகுகள், காய்ந்த தென்னை மட்டைகள் உள்ளிட்டவை அவரது உடல் மீது கிடந்து தீயில் எரிந்த நிலையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீட்டில் இருந்து சுமார் 350 அடி தூரத்தில் தான் ஜெயக்குமாரின் தோட்டம் உள்ளது. அங்கு அவர் எரிந்து கிடந்தார். தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் ஜெயக்குமார் 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந்தேதி அதிகாலையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

தற்கொலை செய்த பின்னர் ஒருவரது உடல் எரிக்கப்பட்டிருந்தால் அதனால் உண்டாகும் புகை அவரின் உடலிலேயே தேங்கி இருக்கும்.

ஆனால் பிரேத பரிசோதனையில் அவரது நுரையீரல் உள்ளிட்ட எந்த பகுதிகளிலும் புகை எதுவும் தேங்கவில்லை. எனவே இது கொலை சம்பவமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று தாக்கி கொலை செய்திருக்கலாம் என்றும், பின்னர் உடலை தோட்டத்தில் வைத்து எரித்து இருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

அவ்வாறு நடைபெற்று இருந்தால் தோட்டத்தின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு அவரது அலறல் சத்தம் கேட்டிருக்கும். மேலும் இரவு நேரத்தில் சம்பவம் நடந்திருப்பதால் தீயின் வெளிச்சம் அங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு தெரியாமல் இருக்காது.

அதேநேரத்தில் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கணேசன் எப்போதும் அங்கு தான் இருப்பார் என்பதால் இது தொடர்பாக அவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போலீசாரிடம் வழங்கப்பட்ட கடிதங்களில் தனக்கு யார் யார் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? தான் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்த விபரங்களை எழுதி வைத்திருந்தார்.

அவர் தனது குடும்பத்திற்கு, மருமகனுக்கு என தனித்தனியாக எழுதியிருந்த கடிதங்களை ஆராய்ந்தபோது அவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த கடிதங்களில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பணத்தை கேட்கும்போது எதிர்தரப்பினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் அதில் எழுதியுள்ளார்.

இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே இந்த கோணத்திலும் விசாரணையை நகர்த்தி வருகின்றனர்.

இதனையொட்டி அவர் கடிதத்தில் எழுதியிருந்த நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக செல்போனிலும், நேரில் அழைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலாவதாக இடையன்குடி பஞ்சாயத்து தலைவரும், கால்டுவெல் பள்ளி தாளாளருமான ஜேகர் தனக்கு ரூ.30 லட்சம் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரிடம் பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் கைப்பட எழுரி நடந்த சம்பவங்களை எழுத்துப்பூர்வமாக போலீசார் பெற்று வருகின்றனர்.

மேலும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஜெயக்குமார் தனசிங் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தில் பொருளாதார ரீதியாக கடந்த சில நாட்களாகவே வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று ஜெயக்குமார் இறப்பின் 3-வது நாள் துக்க நிகழ்ச்சி முடிந்ததும், அவரது மனைவி ஜெயந்தி, மகன்கள் கருத்தையா ஜெப்ரின், ஜோ மார்ட்டின் உள்ளிட்டோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜெயக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நபர்களில் முக்கிய புள்ளி ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அவரது செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது.

எனவே அவரை தேடி பிடிக்க 2 தனிப்படை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 7 தனிப்படையினரையும் ஒவ்வொரு கோணத்தில் விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.