May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கிராமமக்கள்

1 min read

Villagers tried to besiege the police station near Sankarankoil

8.5.2024
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல், தேவர்குளம் ஆகிய 2 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்த 2 பஞ்சாயத்துக்களும் தேவர்குளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது.

இந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேரும், உளவு பிரிவு போலீஸ் ஒருவரும் சாதி ரீதியில் செயல்படுவதாகவும் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் மீது மட்டும் வழக்கு போடுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இதனை கண்டித்து தேவர்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா அறிவித்திருந்தார்.

இதனையொட்டி வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இசக்கி ராஜா தலைமையில் ஏராளமானவர்கள் முற்றுகை போராட்டத்திற்கு வந்தபோது அவர்களை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் சங்கரன்கோவில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் தாழையூத்து, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர்.

அப்போது வன்னிக்கோனேந்தல் கிராம பஞ்சாயத்தின் துணைத் தலைவர் வள்ளிநாயகம் மயக்கம் அடைந்தார்.

உடனே அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்று மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதற்கிடையே பி.எம்.டி. மக்கள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.