வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்
1 min read
PM Modi filed nomination in Varanasi
14.5.2024
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இதில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளார்.
இந்த நிலையில், வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தற்போது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அபிஜித் முகூர்த்தம் என்ற அரிதான முகூர்த்தத்தில் பிரதமர் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமரின் வேட்புமனுவை 4 பேர் முன்மொழிந்து கையெழுத்திட்டனர். அப்போது பிரதமருடன் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர், அதன் பின்னர் வாகன பேரணியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாகன பேரணியில் பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் பல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.