கொலை செய்யப்பட்ட காங். தலைவர் காரை 7 கிலோ மீட்டர் தூரம் பின்தொடர்ந்த வாலிபர்கள்
1 min read
Murdered Kong. The youths followed the leader’s car for a distance of 7 kilometers
15.5.2024
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மச்சாவு வழக்கில் 10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை உறுதியான முடிவுக்கு வரமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அவரது உடல் மீட்கப்பட்ட தோட்டத்தில் கிடைத்துள்ள தடயங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது மர்ம மரணம் குறித்து இறுதி முடிவுக்கு வருவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை எடுத்து அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அவரது உடலில் இருந்து எலும்புகளும் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக பெங்களூரு, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை விசாரணை பல கோணங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், இறுதியாக ஆய்வக பரிசோதனை முடிவுகளுக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை, டி.என்.ஏ. அறிக்கை, உடல் எலும்பு அறிக்கை உள்ளிட்டவை கிடைத்து விடும் என்பதால் போலீசார் காத்திருக்கின்றனர்.
அதேநேரத்தில் நேற்று ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒரு சிறப்பு தனிப்படையை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள் புதிய கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கரைசுத்துபுதூருக்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில் திசையன் விளை ஜவுளிக்கடை, இட்டமொழியில் உள்ள அரசு வங்கி, ஆனைகுடி நகைக்கடை உள்பட வழிநெடுகிலும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையிலான 3 தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
இதில் மாயமான அன்று ஜெயக்குமார் காரில் அந்த வழியாக சென்ற காட்சிகளும், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரை பின்தொடர்ந்தபடியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளன.