July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு

1 min read

An additional allocation of Rs.21 crore for Ramnadi-Jambunadi Upper Canal Project

16.5.2024
இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.21 கோடி ஒதுக்கி, பணிகளை தொடங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்தின் தென் பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியில் உள்ள 21 குளங்களின் நீராதாரத்தை உறுதிப்படுத்திடவும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும், ராமநதி அணையின் உபரி நீரை, ஜம்புநதியின் பாசன பகுதிக்கு கொண்டு வருவதற்காக மேல்மட்ட கால்வாய் அமைக்க வலியுறுத்தி கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கடந்த 2005 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் திருநெல்வேலி வருகை தந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா ராம நதி, ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணி ஆய்வில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து 2006ல் திமுக அரசு அமைந்த பிறகு அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, ரூ. 8 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நபார்டு திட்டத்தின் மூலம் பணி தொடங்க நிதி வேண்டி பரிந்துரை செய்து தமிழக அரசால் அனுப்பப்பட்டது அதன் பிறகு அமைந்த அதிமுக அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ரூ.41 கோடி நிதி ஒதுக்கியதாக 110 விதியின் கீழ் அறிவித்ததுடன், பணியும் தொடங்கியது. ஆனால் முறையாக வனத்துறையில் அனுமதி பெறாமல் பணி தொடங்கப்பட்டதால் வனத்துறை அதிகாரிகளால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் 2021ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் விடுத்த தொடர் கோரிக்கையின் எதிரொலியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக வனவிலங்கு உயிரின குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு, தமிழக வன உயிரின குழு அனுமதி வழங்கியதுடன், மத்திய அரசு தலைமையில் இயங்கும் மத்திய வன விலங்கு உயிரின பாதுகாப்பு குழுவிற்கு பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய உயிரின வனவிலங்கு பாதுகாப்பு குழுமம் இத்திட்டத்தை தொடங்கி, நிறைவேற்றிட அனுமதி வழங்கியது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக அனுமதி பெறாமல் தொடங்கியதால், கிடப்பில் போடப்பட்ட இத்திட்டம் மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் இத்திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.41 கோடியுடன் கூடுதலாக ரூ.21 கோடி நிதி வழங்கியதுடன், இத்திட்டப்பணிகளை தொடங்கிட உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.