சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
1 min read
Youth killed by electric shock near Sankarankoil
16.5.2024
தென்காசி மாவட்டம்,
சங்கரன்கோவில் அருகே கோவில் திருவிழாவிற்காக ஒலிபெருக்கி, அலங்கார விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் காவல்சரகத்திற்கு உட்பட்ட செவல்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவிற்காக ஒலிபெருக்கி, மின்சார விளக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்காரப் பணிகளில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 28) என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென மழை பெய்துள்ளது அதனால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது கணேசன் மின் விளக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்க நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த பொது மக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கணேசன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
செவல்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.