கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” எதிரொலி: தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை
1 min read
“Orange Alert” echoed for heavy rains: Ban on bathing in Tamiraparani river
17.5.2024
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், 18 மற்றும் 19-ந் தேதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 17-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கையும், 18-ந்தேதி மிக கனமழைக்கான எச்சரிக்கையும், 19-ந்தேதி கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.