துணைவேந்தர் நியமன வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
1 min read
Supreme Court notice to Central Government in Vice Chancellor appointment case
5.7.2025
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வக்கீல் வெங்கடாசலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க வழிவகை செய்யும் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நரசிம்மா, மாதவன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக கவர்னர், பல்கலைக்கழக மானியக்குழு ஆகிய 3 தரப்பும் பதில் அளிக்க உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.