செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு
1 min read
Senthil Balaji bail case: Adjournment by Supreme Court
15.5.2024
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீ்ன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மற்றொரு வழக்கு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வருவதால், விசாரணையை கோடை விடுமுறையின் முதல் வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என வாதிட்டார்.
அப்போது செந்தில்பாலாஜி சார்பில் மூத்த வக்கீல் சி.ஏ.சுந்தரம் ஆஜராகி, ‘மனுதாரர் 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘300 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனுதாரருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வாதம் ஏற்கும்படி இல்லை. 2½ ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களின் வழக்குகள் உள்ளன’ என குறிப்பிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொலிசிட்டர் ஜெனரல் வேறு ஒரு வழக்கில் ஆஜராவதால் வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதிட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கை நாளை விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறினர்.