தமிழகத்தில் 5 நாட்கள் மிக கனமழை பெய்யும்-வானிலை நிலையம் எச்சரிக்கை
1 min read
5 days of very heavy rain in Tamil Nadu-Weather station alert
17.5.2024
தமிழகத்தில் வெயில் இந்த ஆண்டு கடுமையாக தாக்கி வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மலைப் பகுதியையொட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்தது.
சுட்டெரித்த வெயிலின் கொடுமையில் இருந்து மக்கள் தப்பித்து குளிர்ந்த காற்று, மழை சூழலை அனுபவித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கடும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலும், தெரு வீதிகளிலும் காற்றுக்காக படுத்து தூங்கினார்கள். கடந்த 4 மாதத்திற்கு பிறகு சென்னையில் தற்போது மழை தூறலும் ரம்மியமான சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் லேசாகவும், ஒரு சில மாவட்டங்களிலும் கன மழையும் பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இன்று (17-ந்தேதி) முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 20-ந்தேதி (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது. தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் வருகிற 19-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (18-ந்தேதி) 20 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். 20-ந்தேதி அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
தென் மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்கள், மலை மாவட்டங்களில் வரும் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.