கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்
1 min read
Weekly special train between Nellai-Bengaluru during summer holidays
21.5.2024
தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.
இதனையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06045 மற்றும் 06046 ஆகிய எண்களுடன் இயங்கும் இந்த சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் புதன்கிழமை நெல்லையில் இருந்து பெங்களூருக்கும், மறுநாள் காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு அதே நாளில் நெல்லைக்கும் வந்தடையும் வகையில் இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது. நாளை (புதன்கிழமை) நெல்லையில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் இந்த ரெயில் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை இயக்கப்படுகிறது.
நாளை மாலை 3.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு பெங்களூர் செல்கிறது. இதேபோல் மறு மார்க்கமாக நாளை மறுநாள் இயக்கத்தை தொடங்கி வருகிற 13-ந் தேதி வரை பெங்களூரில் இருந்து நெல்லைக்கு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி நாளை மறுநாள் பெங்களூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மாலை 6.28 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயிலானது நெல்லையில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு மாநிலம் எலகங்கா வரை இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.