June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

மேக்கரை பகுதியில் ஜீப் கவிழ்ந்து டிரைவர் பலி

1 min read

Jeep overturns in Makerai area, driver killed

25.5.2024
தென்காசி மாவட்டம்
மேக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டிற்கு சமையல் பொருட்களை ஏற்றி சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த ஜீப்பின் டிரைவர் பலியானார்.

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மேக்கரை பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில்
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மேக்கரைபகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வரும் நீரோடைகளை மறித்து அதிக அளவிலான தனியார் நீர்வீழ்ச்சிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு தனி நபர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரானது இந்த தனியார் நீர்வீழ்ச்சிகளால் சோப்பு, சியாம்பு உள்ளிட்ட கழிவுநீர் கலந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக அப்போது இருந்த ஆகாஷ் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், அந்த விசாரணையின் போது சட்டவிரோதமாக 33 தனியார் நீர்வீழ்ச்சிகள் மேக்கரைப்பகுதியில் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த 33 தனியார் நீர்வீழ்ச்சிகளும் இடிக்கப்பட்டன.இருந்தபோதும், இயற்கையாக இருந்த ஒரு சில நீர்வீழ்ச்சிகளை அகற்றவில்லை. மேலும், அந்த நீர்வீழ்ச்சிகளில் அவ்வப்போது பொதுமக்கள் குளித்து வந்த நிலையில், இன்றைய தினம் மேக்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி உள்ள கரிக்குளம் என்கின்ற பகுதியில் உள்ள மோகன் என்பவருக்கு சொந்தமான ரிசார்ட்டில் தங்கி இருந்தவர்களுக்கு சமையல் செய்ய கேஸ் சிலிண்டர், பெட்ஷீட், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு ஜூப் ஒன்று சென்றுள்ளது.

அப்பொழுது, கல்லும் மண்ணுமாக இருந்த மலைப்பாதையில் ஜீப்பானது ஏறிக்கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.இதில் ஜீப் ஓட்டுனரான மேக்கரை பகுதியை சேர்ந்த ரித்திஷ் (வயது 38) என்பவர், ஜீப்பிற்கு அடியில் மாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இதை பார்த்த விவசாயி ஒருவர் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில், விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அச்சன்புதூர் காவல்துறையினர் கவிழ்ந்து கிடந்த ஜீப்பை அகற்றிஜீப் டிரைவர் ரித்திசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மேக்கரை பகுதியில் தனியார் நீர்வீழ்ச்சிகள் இன்னமும் செயல்படுவதாகவும், தற்போது குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேக்கரை பகுதிக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் இந்த தனியார் அருவிகளுக்கு செல்லும் பாதைகள் கரடு முரடாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.