ஒடிசாவில் மண்ணின் மைந்தனே முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்-வி.கே.பாண்டியன் பேட்டி
1 min read
Odisha’s Soil Maintane to take office as Chief Minister – VK Pandian Interview
29/5/2024
”ஒடிசா மண்ணின் மைந்தன் ஜூன் 9ம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணிக்குள் முதல்வராக பொறுப்பேற்பார்,” என 5டி திட்ட தலைவரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், தமிழருமான வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.
ஒடிசாவில் சட்டசபை தேர்தலுடன், லோக்சபா தேர்தலும் சேர்த்து 4 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 3 கட்டங்கள் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் வரும் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆட்சியில் இருக்கும் பிஜூ ஜனதா தளத்திற்கும் பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருந்த தமிழரான வி.கே.பாண்டியன், ராஜினாமா செய்து, பின்னர் அவரது கட்சியில் சேர்ந்து பிஜூ ஜனதா தளத்திற்கு ஆதரவான பிரசாரத்தை வழிநடத்தி வருகிறார்.
நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக அறியப்படும் வி.கே.பாண்டியன், இந்த தேர்தலில் நிற்கவில்லை என்றாலும், அவரே முதல்வரையும் ஆட்சியையும் வழிநடத்துவதாக பா.ஜ., குற்றம்சாட்டி வருகிறது. வயதை காரணம்காட்டி நவீன் பட்நாயக் ஓய்வெடுத்துவிட்டு, வி.கே.பாண்டியன் ஆட்சியை கவனிப்பார் என்றும் விமர்சிக்கின்றனர்.
இதனை மனதில் வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிசாவைத் தமிழர் ஆள அனுமதிக்க முடியாது எனப் பேசி வருகிறார். அதோடு, ஒடியா மொழிப்பேசும் இளம் தலைவரை தான் முதல்வராக்குவோம் என்றும் உறுதியளித்தார்.
தமிழரான வி.கே.பாண்டியனை குறிவைத்து முன்னெடுக்கப்படும் பிரசாரத்தை பா.ஜ., கையிலெடுத்துள்ளதை ஒடிசா மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது ஜூன் 4ல் தேர்தல் முடிவின்போது தெரியவரும்.
இது தொடர்பாக வி.கே.பாண்டியன் கூறுகையில், ”ஜூன் 9ம் தேதி எங்கள் அரசு மீண்டும் ஆட்சியில் அமரும். ஒடியா மொழி பேசுபவராக மட்டுமல்லாமல், இம்மாநில மக்களின் இதயங்களில் வாழ்பவரே முதல்வராக இருப்பார். ஜூன் 9ல் காலை 11:30 மணி முதல் மதியம் 1 மணிக்குள், இந்த மண்ணின் மைந்தன் முதல்வராக பொறுப்பேற்பார்” என பதிலளித்தார்.
மேலும் வி.கே.பாண்டியன் கூறியதாவது:-
மத்திய அரசின் தலைவர்களும், பா.ஜ., மாநில முதல்வர்களும் தேர்தலுக்காக ஒடிசா மாநிலத்திற்கு வருவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் மாநிலத்திற்கு ஒன்றும் செய்யாதவர்கள் என்பதால் எதுவும் நடக்காது. ஒடிசாவிடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு பெற்றுக்கொண்டு வெறும் ரூ.5,000 கோடியை மட்டுமே திருப்பி தருகின்றனர். இப்படியான செயலை செய்துவிட்டு, ஒடிசா கனிமவளம் மிக்க மாநிலம் என முதலைக்கண்ணீர் விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.