வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி நாளையுடன் நிறைவு- வனத்துறை அறிவிப்பு
1 min read
Permit for Velliangiri trek ends tomorrow- Forest department notification
30.5.2024
கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது.
சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள்.
இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி நாளையுடன் (31-ந்தேதி) நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது.
அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.
இதற்கிடையே மேற்குதொடர்ச்சிமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.
மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.
எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மலையேற வருவோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் அவர்களிடம் ரூ.20 வைப்புத்தொகையாக பெறப்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் 94 சதவீதம்பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்றுவிட்டனர்.
மேலும் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தூய்மை ப்பணியில் ஈடுபட்டபோது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும், ஈரத்துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.