முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி பயணம் திடீர் ரத்து
1 min readChief Minister Stalin’s visit to Delhi was suddenly cancelled
31/5/2024
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்துவரும் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வரும் 1-ம் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
அடுத்த மாதம் 4-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியம் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது உறுதியாகி விடும். பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 272 இடங்களை பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி 3-வது தடவையாக ஆட்சி அமைக்க தீவிரமாக உள்ளது. 400-க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து அந்தக் கட்சி பிரசாரம் செய்துள்ளது.
ஆனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் தாங்கள்தான் மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவோம் எனக்கூறி வருகிறார்கள். தங்களுக்கு 350 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வரும் 1-ம் தேதி பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியானது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.