ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என அறிவிப்பு
1 min readDonald Trump guilty of paying porn star
31.5.2024
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் டொனால்டு டிரம்ப் பாலியல் உறவு கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஸ்டோமி டெனியல்ஸ் இந்த விவகாரத்தை வெளியே கூறிவிடக்கூடாது என்பதற்காக 2016 ம் ஆண்டு அவருக்கு பணத்தை கொடுத்து டொனால்டு டிரம்ப் சமரசம் செய்துள்ளார்.
இந்த விவகாரம் 2018ம் ஆண்டு வால் ஸ்டிரிட் ஜெர்னல் செய்தி நிறுவனம் நடத்திய ரகசிய ஆய்வில் தெரியவந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு திரட்டப்பட்ட பணத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து ஸ்டோமி டெனியல்சுக்கு டிரம்ப் பணம் கொடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டொனால்டு டிரம்பிற்கு எதிராக பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என மன்ஹாட்டன் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பணமோசடி உள்பட 34 பிரிவுகளில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
டொனால்டு டிரம்பிற்கு அடுத்த மாதம் 11ம் தேதி தண்டனை வழங்கப்பட உள்ளது. பணமோசடி வழக்கில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். அதேவேளை, குறைந்தபட்ச தண்டனையும் வழங்கப்படலாம். தண்டனை நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டதாகும். அமெரிக்க நாடாளுமன்ற அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் விரைவில் அறிக்கப்பட உள்ளார். இந்த சூழ்நிலையில் குற்றவழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்துள்ள நிகழ்வு அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரு மோசடியான அவமானகரமான வழக்கு. இதற்கு உண்மையான தீர்ப்பு நவம்பர் 5 (அமெரிக்க அதிபர் தேர்தலில்) மக்களால் வழங்கப்படும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். நான் நிரபராதி, நமது தேசத்துக்காகவும் அரசியலமைப்புக்காகவும் போராடி வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் டொனால்டு டிரம்பின் அதிகாரப்பூர்வ நிதி திரட்டும் இணைய பக்கத்தில் (FUNDRISING PAGE) தான் ஒரு ‘அரசியல் கைதி’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், “நான் இப்போது அரசியல் சூனிய வேட்டையில் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உண்மையை பேசியதற்கு அரசியல் சூழ்ச்சியால் அவர்கள் என்னை சிறையில் அடைக்க விரும்பினால் நான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று நாவீன காலத்தின் நெல்சன் மண்டேலாவாக மாறுவேன். அது எனக்கு மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு காரணமாக டிரம்ப் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை என கூறப்படுகிறது. அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.