ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
1 min read
PM Modi thanks people for voting for Democratic Alliance
4/5/2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே சமயம் ‘இந்தியா’ கூட்டணி 235 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்! இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. வாக்களித்த பெரும்பான்மையான மக்களின் இந்த பாசத்திற்காக நான் தலை வணங்குவதுடன், கடந்த பத்தாண்டுகளில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் நாங்கள் செய்த நல்ல பணிகளைத் தொடர்வோம் என்று உறுதியளிக்கிறேன். எங்கள் அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் அவர்களின் கடின உழைப்புக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் விதிவிலக்கான முயற்சிகளுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்வது போதாது” என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி ஒடிசா! இது ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டாடும், நல்லாட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும், ஒடிசாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதிலும் பா.ஜ.க. எந்த முயற்சியையும் விட்டு வைக்காது. எங்கள் கட்சியின் காரியகர்த்தாக்களின் முயற்சிகளுக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆந்திர பிரதேச மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விதிவிலக்கான ஆணையை வழங்கியது ஆந்திரா! அம்மாநில மக்களின் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உறுதியான வெற்றிக்காக சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் ஆந்திர பா.ஜ.க. காரியகர்த்தாக்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஆந்திராவின் அனைத்துத் துறை முன்னேற்றத்திற்காகவும், வரும் காலங்களில் மாநிலம் முன்னேறுவதை உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.