July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது-எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்

1 min read

Former Union minister’s reply to Elon Musk

16.5.2024
இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்றும், ஹேக் செய்து முடிவுகளை மாற்ற முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. ஆனால், இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று கூறி வழக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டன. ஆனாலும், குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்படுவதும், அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிப்பதும் வழக்கமாக உள்ளது.
அவ்வகையில், இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் அருகில் உள்ள போர்ட்டோ ரிகோ தீவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற விவாதம் எழுந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராபர்ட் எப். கென்னடி ஜூனியர், எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
எலான் மஸ்க்கின் கருத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து எலான் மஸ்க்கிற்கு கற்றுக்கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது. இது தவறு. எலான் மஸ்க்கின் பார்வை அமெரிக்காவிற்கும் பிற இடங்களுக்கும் வேண்டுமானால் பொருந்தும். அங்கு அவர்கள் இணையத்துடன் இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க வழக்கமான கணினி தளங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனித்துவமான அமைப்பாகும். எந்த வகையான நெட்வொர்க் அல்லது மீடியாவுடனும் இணைக்கப்படாதது. புளூடூத் மற்றும் வைபை இணைப்பு கிடையாது. இணைய இணைப்பு இல்லை. அதாவது உள்ளே நுழைய எந்த வழியும் இல்லை. புரோகிராமை மாற்றியமைக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டவை. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இந்தியா உருவாக்கியதை போன்று உருவாக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு உடனே பதில் அளித்த எலான் மஸ்க், எதையும் ஹேக் செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ராஜீவ் சந்திரசேகர், “தொழில்நுட்பத்தில் வேண்டுமானால் எதுவும் சாத்தியமாகும். குவாண்டம் கம்ப்யூட்டிங் மூலம், எந்த அளவிலான தரவு பாதுகாப்பு செயல்முறையையும் என்னால் மாற்றியமைக்க முடியும். லேப்-லெவல் தொழில்நுட்பம் மற்றும் சில அமைப்புகளுடன், ஜெட் விமானத்தின் காக்பிட்டின் விமானக் கட்டுப்பாடுகள் உட்பட எந்த டிஜிட்டல் வன்பொருள் அல்லது அமைப்புகளை என்னால் ஹேக் செய்ய முடியும். ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அப்படி செய்ய முடியாது. இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை” என்றார்.

இந்த விவாதத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் இணைந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார். இந்தியாவில் மின்னணு வக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது கருப்பு பெட்டியாகவே உள்ளது என்றும், அவற்றை ஆய்வு செய்ய யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்றும் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.