கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு; சட்டசபையில் இரங்கல்
1 min readKallakurichi Poisonous Liquor Death; Condolences in the assembly
20.6.2024
தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 22-ம் தேதி வரை பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. இருப்பினும் மக்களவைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படாமல் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24’ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனிடையே விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே 20-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 29-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கி வருகிற 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதன்படி இன்று காலை தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டப்பேரவை கூடியதும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்றார். இதைத் தொடர்ந்து அவையின் இன்றைய நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.