கோவையைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயரும் ராஜினாமா?
1 min read
Did the Mayor of Nellie Corporation also resign after Coimbatore?
2.7.2024
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.
மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.
ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.
இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.
அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.