ராகுல் காந்தி விளம்பரம் தேடிக்கொள்ள பார்க்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
1 min read
Rahul Gandhi looks to seek publicity – Interview with Tamilisai Soundararajan
2.7.2024
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் கவர்னரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி இருக்கும்.
இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
பாராளுமன்றத்திற்கு என்று ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆனால் ராகுல் காந்தி படத்தை காண்பித்து வருகின்றார். 3 அமைச்சர்கள் எழுந்து இதற்கு பதில் சொன்னார்கள். ராகுல் காந்தி எதிர்மறையான கருத்துகளை தவறாக சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள்.
இன்னுயிரை நாட்டிற்காக ஈன்றவர்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் கொடுக்கவில்லை என்று ராகுல் சொன்னார். உடனடியாக ராஜ்நாத் சிங் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
விவசாயிகளுக்கு பயிர்களுக்கு விலை நிர்ணயம் இல்லை என்று தவறான கருத்தை சொன்னார். அதற்கும் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டி இருந்தது.
பாராளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ஏதோ விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்று ராகுல் பேசுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 எம்.பி.க்கள் உள்ளனர். ராகுல் காந்தி இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு பேசினாலும் 40 எம்.பி.க்கள் வாயை திறக்காமல் அமர்ந்திருந்தது வேதனை அளிக்கக்கூடியது. இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது.
சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான், ஒரு வேதனையான நிலையை பாராளுமன்றத்தில் பார்த்து இருக்கின்றோம். இதனை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் பிரதமர் தயாராக இருப்பார் என்பது எனது கருத்து.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்ட உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் துறை சார்ந்த அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை. விசாரணை வேண்டும் என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள். தமிழக அரசாங்கமும் பயப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு, தமிழக எம்.பி.க்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தான் மன வேதனை.
இவ்வாறு அவர் பேசினார்.