July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

“பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்?”- அண்ணாமலை கேள்வி

1 min read

“Why 21 Lakh Farmers Excluded From BM Kisan Scheme?”

15.7.2024
பிஎம் கிசான் திட்டத்திலிருந்து 21 லட்சம் விவசாயிகள் நீக்கப்பட்டது ஏன்? என்றும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி சேலத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செய்தார். இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு 2020-ல் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் காலை உணவு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு நிதி வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய கல்விக் கொள்கை மிக சிறப்பான திட்டங்களைக் கொண்டது. ஒரு மாநில அரசு அதனை நிறைவேற்ற வேண்டும்.

ஆனால், தமிழக அரசு அதனை ஏற்காமல் விதண்டாவாதம் செய்வது வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை யார் செய்தாலும் அதை வரவேற்க வேண்டும். காலை உணவு மட்டுமல்ல, மதிய உணவும் மாணவர்களுக்கு சத்தாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பிஎம் கிசான் திட்டத்தில், 43 லட்சம் விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 நிதி பெற்று வந்தனர். இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகள் மட்டுமல்லாமல், அரசு பணியில் இருப்பவர்கள், வார்டு கவுன்சிலராக இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரை தவிர்த்து, விவசாயிகள் அனைவரையும் சேர்க்கலாம் என்று மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தது.

ஆனால், தமிழகத்தில் தற்போது 21 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 22 லட்சம் விவசாயிகள் மட்டுமே தற்போது, பிஎம் கிசான் திட்டத்தில் நிதி பெறுகின்றனர். விவசாயிகள் மத்திய அரசின் மீது அதிருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவே விவசாயிகளை பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து நீக்கி உள்ளனர். இதனை கண்டித்து திருச்சி தொடங்கி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் 4,372 அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் மாநிலம் முழுவதும் 19 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நீக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி காலிப்பணியிடங்கள் அனைத்தையும் தமிழக அரசு நிரப்ப வேண்டும். டெட் தேர்வு முடித்து ஏராளமான ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களுக்கு, தேர்தல் வாக்குறுதிபடி தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்”.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.