தென்காசியில் மனைவியை கொலை செய்த கணவன் கைது
1 min read
Husband arrested for killing his wife in Tenkasi
16.7.2024
தென்காசியில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி சொர்ண புரம் தெருவை சேர்ந்தவர் மஸ்தான் (வயது 48). இவரது மனைவி பாத்திமா (வயது 40). மஸ்தான் பர்னிச்சர் வேலை பார்க்கும் தொழிலாளி. மேலும் அவருக்கு 2 கால்களும் செயல்படாத மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு 24 வயதில் ஒரு மகனும் 20 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி டிஎஸ்பி நாகசங்கர், தென்காசி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் மஸ்தானின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அவரது மனைவி பாத்திமா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மஸ்தான் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷிடம் கூறியதாவது: நீண்ட நாட்களாக பாத்திமாவின் நடவடிக்கைகளில் மஸ்தானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வேறு யாருடனும் அவருக்கு தொடர்பு இருக்கும் என்று அவர் எண்ணியுள்ளார். இதுகுறித்து கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு மஸ்தான் தனது மனைவி மீது தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பாத்திமா தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு கணவர் மஸ்தானால் இதை தாங்க முடியவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மஸ்தான் அவரது மனைவிக்கு புரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார். அப்போது சால்னாவில் தூக்க மாத்திரைகளை அதிக அளவில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் பாத்திமா நன்றாக தூங்கிவிட்டார். அதன்பிறகு பாத்திமாவின் கை, கால்களை கட்டிய மஸ்தான் பின்னர் சேலையை வைத்து பாத்திமாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காலை வரை பாத்திமாவின் உடல் அருகிலேயே இருந்த மஸ்தான் காலையில் தென்காசி கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்துள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாத்திமாவின் காலில் வேறு ஒரு ஆணின் பெயர் பச்சை குத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.