காவிரி விவகாரத்தில் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
1 min read
We will approach Supreme Court if necessary on Cauvery issue: Decision of all party meeting
16.7.2024
காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து விவாதிக்க அனைத்து தமிழக சட்டசபை கட்சித்தலைவர்கள் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் செல்வப் பெருத்தகை, பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு நீரை திறந்து விடாத கர்நாடக அரசின் முடிவை ஏற்க முடியாது. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதையடுத்து, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத் தருவதற்கு தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவுப்படி தினமும் ஒரு டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நடுவர்மன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளுக்கு இணங்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.