குளிர்பானம் குடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம்: தயாரிப்பு ஆலையில் ஆய்வு
1 min read
Child’s death after drinking soft drink: Investigation at manufacturing plant
13/8/2-024
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசியை அடுத்த கனிகிலுப்பைக் கிராமம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், கூலி தொழிலாளி. இவரது 2-வது மகள் காவ்யாஸ்ரீ (வயது 5). இவள் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தாள். காவ்யாஸ்ரீ நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி வந்து குடித்ததாக கூறப்படுகிறது.
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. அதனைத்தொடர்ந்து மூக்கிலும், வாயிலும் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தாள். உடனடியாக பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காவ்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்நிலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் குளிர்பான ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். கடந்த 2022, 2024 ஜனவரியிலும் இதே ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி இருந்தனர். ஏற்கனவே நடந்த இரண்டு ஆய்வுகளிலும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இதே நிறுவனம் தயாரித்த குளிர்பானம் குடித்து 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.