அரியானாவில் அக்டோபர் 1-ம் தேதி சட்டசபை தேர்தல்
1 min read
Assembly elections in Haryana on October 1
16.8.2024
90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரியானாவில் தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரியானா தேர்தல் தேதியை அறிவித்தார். அவர் கூறியதாவது:-
அரியானா மாநிலத்தில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பாணை செப்டம்பர் 5-ம் தேதி வெளியிடப்படும். அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் செப்டம்பர் 12-ம் தேதி ஆகும். அதன்பின்னர் செப்டம்பர் 13-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு செப்டம்பர் 16-ம் தேதி கடைசி நாள். அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். அக்டோபர் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
அரியானா மாநிலத்தில் 2 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக நகர்ப்புறங்களில் 7,132 வாக்குச்சாவடிகள், 13,497 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். குருகிராமம், சோனிபட் மற்றும் பரிதாபாத் நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.