‘மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்’ – நிர்பயாவின் தாயார் கருத்து
1 min read
‘Mamata Banerjee should resign’ – Nirbhaya’s mother says
17.8.2024
தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ‘நிர்பயா’, ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு, நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், ‘நிர்பயா’ சம்பவம் அரங்கேறி சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மற்றொரு கொடூர பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ந்தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 14-ந்தேதி ஆர்.ஜி.கார் மருத்துவமனைக்குள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்ககோரி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.
இந்த நிலையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நிலைமையை கையாள தவறிவிட்டார் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்த பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார்.
மாநில முதல்-மந்திரி என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றவாளிகள் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சூழ்நிலையை கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தண்டனை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டும் வரை, இதுபோன்ற கொடூர செயல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே இருக்கும்.
கொல்கத்தாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.