பெண் டாக்டர் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு
1 min read
Female doctor’s murder case: Supreme Court decided to take its own initiative to investigate
18/8/2024
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக இருந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், பயிற்சி டாக்டர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு கேட்டும், அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே கடந்த 15-ம் தேதி ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த ஒரு கும்பல், மருத்துவமனையை சூறையாடியது.இந்த சூழலில் பயிற்சி டாக்டர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே பயிற்சி பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம் ஏ) அழைப்பு விடுத்தது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கேரளா, குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களிலும் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் டெல்லி, தமிழ்நாடு, அரியானா, பஞ்சாப், சண்டிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கும் வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே வழக்கின் விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ. அதிகாரிகள், அதன் ஒரு பகுதியாகப் பெண் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்தனர். இந்த குழுவில் சிறப்பு மருத்துவர்கள் குழு, சிறப்புத் தடயவியல் குழுவினரும் அடங்கி உள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சி.பி.ஐ.யிடம் மாநில போலீசார் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் (20.08.2024) விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.