கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
1 min read
Karunanidhi Centenary Commemorative Coin released by Union Minister Rajnath Singh
18.8.2024
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதற்கு, மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் தங்கம் தென்னரசு, பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தற்போது வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தைப் பெற்றுக் கொண்டார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் கருணாநிதி உருவத்துடன் அவர் கையெழுத்திலான ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உரையாற்ற வந்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், அனைவரும் எழுந்து நின்று மகத்தான தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்த அழைக்கிறேன் என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். பின்னர் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை; துணிச்சல்மிக்கவை. இந்தியாவின் தேசிய ஆளுமை கருணாநிதி. நாட்டின் தலைசிறந்த நிர்வாகியான கருணாநிதி மத்தியில் வெற்றிகரமான கூட்டணி அரசமைய காரணமானவர். கருணாநிதியின் பொது நலத்தொண்டால் நாட்டிற்கே நன்மை ஏற்பட்டுள்ளது. 1960 முதல் தற்போது வரை ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக தி.மு.க.வை வளர்த்தவர் கருணாநிதி.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாடுபட்ட கருணாநிதி நாட்டு நலனுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை உருவாக்கியதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உண்டு. பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தவர் கருணாநிதி. விளிம்பு நிலை மக்களுக்கு தரமான கல்வியை வழங்க திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
மகளிர் அதிகாரம் பெற கருணாநிதி கொண்டு வந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் உதவுகின்றன. பாலின சமத்துவம் பேணும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.