கலைஞர் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது: மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read
RAJNATH SINGH ISSUING AN ARTIST’S COIN IS VERY APPROPRIATE: SPEECH BY PRIME MINISTER M.K.STAL
18/8/2024
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியிடப்பட்டது. மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டார். 100 ரூபாய் நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினரும் பங்கேற்றனர்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கலைஞருக்கு ரூ.100 நினைவு நாணயம் வெளியிட ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி.. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாணயத்தை வெளியிட்டது மிக பொருத்தமானது. பல அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும், அனைத்துக் கட்சியினருடனும் இணக்கமாக உள்ள ராஜ்நாத் சிங், கருணாநிதி நாணயத்தை வெளியிட சிறந்த தேர்வு. நாணயத்தை வெளியிட ராஜ்நாத் சிங்கை அனுப்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.
இது போன்ற எத்தனையோ சிறப்புகளுக்கும் தகுதியானவர் தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. கடந்த ஆக.15ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் அந்தந்த மாநிலங்களில் கொடி ஏற்றினார்கள், அதற்குக் காரணம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பெயரும் நாணயம் தான், சொன்ன வாக்கை செயல்படுத்தி காட்டியது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நாணயம் தான்.
கார்கில் போரின்போது அதிக தொகையை வசூலித்துக் கொடுத்தவர் கருணாநிதி. தமிழகத்தில் நடப்பது கட்சியின் அரசல்ல, ஒரு இனத்தின் அரசு. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவாக்கிய கட்டமைப்புகளை பட்டியலிட்டு கூற ஒருநாள் போதாது” இவ்வாறு அவர் கூறினார்.