சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம்: பயிற்சி போட்டிகள் தொடக்கம்
1 min read
Formula 4 Car Race in Chennai: Practice Races Begin
31.8.2024
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது. இதையொட்டி சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில் எப்.ஐ.ஏ. சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்தது. முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டதால் இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தற்போது தொடங்கி உள்ளது. பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரவு 7 மணிக்கு தொடங்கிய கார் பந்தய பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணிக்கு நிறைவடைகிறது.