கடையத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி
1 min read
Eye Donation Awareness Rally in Kadayam
3/9/2024
தென்காசி மாவட்டம், கடையத்தில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் 39ஆவது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கடையம் ஒன்றியக் குழுத் தலைவர் மு.செல்லம்மாள், காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் முன்னிலை வகித்தார். அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரேம்குமார் ஜோசப் கண் தானத்தின் அவசியம், கருவிழி பார்வை இழப்பு தடுப்பு குறித்து எடுத்துரைத்தார். கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து கடையம் பேருந்து நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் வழியாக சத்திரம் பாரதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி நிறைற்றது. பேரணியில் கடையம் ஆதர்ஷ் வித்யாஷ்ரம் பள்ளி, ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கடையம் சத்திரம் பாரதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீழமாதாபுரம் எவரெஸ்ட் ஐ.டி.ஐ. தெற்குமடத்தூர் ஏ.ஆர். செவிலியர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கண் தான விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் வந்தனர்.
மேலும், பேரணியில் கடையம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் நலச்சங்கம், தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் சங்கம், கடையம் பாரதி அரிமா சங்கம், அம்பாசமுத்திரம் சுழற் கழகம், கடையம் வியாபாரிகள் நல சங்கம், முதலியார்பட்டி தென் பொதிகை வியாபாரிகள் சங்கம், கடையம் சேவாலயா அறக்கட்டளை, கடையம் சைவப் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரணிக்கான ஏற்பாடுகளை துணைப் பொது மேலாளர் பிரபு, முதன்மை முகாம் மேலாளர் ஆ.சை. மாணிக்கம், கண் வங்கி மேலாளர் ஜெகதீஷ், ஷேக் அப்துல்லா, அப்துல் ஹமீது மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.