குற்றாலத்தில் மலைப்பாம்பு மீட்பு
1 min read
Rescue of Python in Courtalam
10.9.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவிப்பகுதியில் நடமாடிய மலைப் பாம்பை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குற்றாலம் மெயின் அருவிப்பகுதிக்கு செல்லும் நுழைவாயில் அருகில் கார் பார்க்கிங் வசூல் செய்யும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதைப் பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தென்காசி மாவட்ட உதவி தீயணைப்பு துறை அலுவலர் பிரதீப் குமார், மற்றும் அலுவலர்கள் ஜெயரத்தினகுமார், ஜெயப்பிரகாஷ், பாபு மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மாதவன் விஸ்வநாதன் சுந்தர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பகுதியில் மறைந்திருந்த மலை பாம்பை பத்திரமாக பிடித்தனர்.
அதன்பின் குற்றாலம் வனவர் சங்கர் ராஜா, மற்றும் வனத்துறையினர் செண்பகம், ஐயப்பன், மாடசாமி, ஆகியோரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் குற்றாலம் வனப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அந்த மலைப் பாம்பினை பாதுகாப்பாக கொண்டு விட்டனர்.
குற்றாலத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடமாடிய மலைப் பாம்பினை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்ட தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.