எம்-பாக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
1 min readWorld Health Organization approval of M-pox vaccine
14/9/2024
ஆப்பிரிக்க நாடுகளில் எம்-பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் பரவி வருகிறது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் இந்நோயக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் இறந்துள்ளனர். நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியவர்களில் எம்-பாக்ஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான முதல் அங்கீகாரத்தை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் எம்-பாக்ஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படியாகும் என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
பவேரியன் நோர்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை இப்போதைக்கு தடுப்பூசி கூட்டணியான கேவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே உள்ளது.
நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளபடி, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றாலும், தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படலாம் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்-பாக்ஸ் நோயால் காங்கோ நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். இதேபோல் உயிரிழந்தவர்களில் 85 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.