March 17, 2025

Seithi Saral

Tamil News Channel

தளவாய் சுந்தரம் அ.தி.மு.க. கட்சிப் பதவியில் இருந்து நீக்கம்

1 min read

Thalai Sundaram A.D.M.K. Removal from party post

8.10.2024
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமாக பதவி வகித்து வந்த தளவாய் சுந்தரம், கட்சி நிர்வாகிகளுடன் இணக்கமாக செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. இந்த சூழலில், விஜயதசமியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், ஈசாந்திமங்கலத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்த வீடியோ வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தளவாய் சுந்தரத்தை கட்சிப் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி கொள்கை – குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தளவாய் சுந்தரத்தை கட்சி பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுவிடுக்கப்படுகிறார்” அறிவித்துள்ளார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க.வில் முக்கிய நபராக இருக்கும் தளவாய் சுந்தரத்தின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பதவியைப் பறித்தால் கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மீது நடவடிக்கை எடுத்ததால் கவலையில்லை. தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்தேன்” என்று தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் தளவாய் சுந்தரம். அதற்கு முன்னதாக ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். டெல்லியின் தமிழக பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார் தளவாய் சுந்தரம்.
இதனிடையே திருச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜாவிடம், ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடக்கி வைத்ததால் தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எச்.ராஜா, “தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.