சிறையில் நடந்த ராமாயண நாடகம்: வானர வேடமிட்ட 2 கைதிகள் சுவர் ஏறி தப்பியோட்டம்
1 min read
Ramayana drama in prison: 2 prisoners disguised as monkeys climb the wall and escape
13.10.2024
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்ட சிறையில், தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை ராமாயண நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தில் சிறைக் கைதிகள் சிலர், வானரங்கள்(ராமரின் படையைச் சேர்ந்த குரங்குகள்) போல் வேடமிட்டிருந்தனர்.
அவ்வாறு வானர வேடமிட்டிருந்த பிரமோத் மற்றும் ராம்குமார் ஆகிய 2 கைதிகள், நாடக மேடையில் இருந்து யாருக்கும் தெரியாமல் இறங்கி, சிறை வளாகத்தின் பின்புற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், கட்டுமானப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஏணியை எடுத்து, 2 கைதிகளும் சிறைச் சுவரில் ஏறி, தாண்டி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.
இதில் பிரமோத், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஆவார். அதேபோல் ராம்குமார், கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வைக்கப்பட்டிருந்தார். கைதிகள் இரண்டு பேர் தப்பியோடிய விவகாரத்தில், 6 சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர்.
தப்பியோடிய கைதிகள் இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் கர்மேந்திர சிங் கூறுகையில், “சிறை நிர்வாகத்தினர் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர். ராமாயண நாடகத்தை பார்த்த நேரத்தில், தங்கள் கடமையிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதே சமயம், காவல்துறை எஸ்.எஸ்.பி. பிரமோத் சிங் தோவல் கூறுகையில், “கைதிகள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை தப்பி ஓடியுள்ளனர். ஆனால் இது குறித்து எங்களுக்கு சனிக்கிழமை காலைதான் தகவல் தெரிவிக்கப்பட்டது. எதற்காக இந்த காலதாமதம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தப்பியோடிய கைதிகளை விரைவில் கைது செய்வோம்” என்று தெரிவித்தார்.