நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய உரிமையாளர் மீது வழக்கு
1 min read
Case filed against owner of NEET coaching center for assaulting students
19.10.2024
திருநெல்வேலியில் செயல்படும் ஜல் நீட் அகாடமியில் மாணவர்களை தாக்கிய மையத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வாடகை கட்டடத்தில் கேரளத்தைச் சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் (52), நடத்தும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். ஜலாலுதீனும் வகுப்பு எடுப்பார்.
ஆகஸ்ட் 25ல் அவர் வகுப்பு எடுத்தபோது சில மாணவர்கள் தூங்கியுள்ளனர். அந்த மாணவர்களை அவர் பிரம்பால் அடித்துள்ளார். மையத்தின் முன்பு காலணிகளை முறையாக போடாததால் அவற்றை கையில் எடுத்து வந்து வகுப்பில் வீசியுள்ளார்.
இவ்வாறு மாணவர்களை தினமும் அடித்து உதைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர். மேலப்பாளையம் போலீசார் விசாரிக்க முன்வரவில்லை.
எனவே அங்கு வார்டனாக பணிபுரிந்த திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த அமீர் உசேன் (23), என்பவர் மாணவர்கள் தாக்கப்படும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து மேலப்பாளையம் ஸ்டேஷனில் சென்று புகார் செய்தார்.
அப்போதும் புகாருக்கான ரசீது மட்டும் வழங்கிய மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் விஜி, புகார் குறித்து ஜலாலுதீனிடம் கூறியுள்ளார். அமீர் உசேனை ஜலாலுதீன் வேலையில் இருந்து நீக்கினார்.
இதையடுத்து புகார் செய்த அமீர் உசேன் பதிவு காட்சிகளை ஊடகங்களுக்கு வழங்கினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் வழக்கமான பணிகளுக்காக வந்து திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார்.
அவரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே ஜல் நீட் அகாடமி வளாகத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.
அவர் கூறியும் போலீஸ் அதிகாரிகள் யாரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார். காயம் பட்டதை உறுதி செய்தார். இதையடுத்து மூன்று பிரிவுகளில் ஜலாலுதீன் மீது மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பயிற்சி மையம் நடத்த முறையான அனுமதி உள்ளதா, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அந்த விடுதிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யவும், உணவின் தரத்தை சோதிக்கவும் கண்ணதாசன் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் கூறும்போது, முன்னரே புகார் வந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்துள்ளேன். இந்த சம்பவத்தில் புகார் கொடுத்தவர்கள் வாபஸ் பெற்றாலும் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை நடத்தும் என்றார்.