அயர்லாந்து நாட்டுக்காக மாமல்லபுரத்தில் உருவாகும் 20 அடி சிலை
1 min read
A 20 feet statue for Ireland will be built in Mamallapuram
20.10.2023
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் அருகே விக்லோ என்ற நகரில் விக்டர்ஸ் வே என்ற சிற்பக்கலை பூங்கா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் விக்டர்(வயது85) என்ற அயர்லாந்து நாட்டு கலைஞரால் உருவாக்கப்பட்டது.
அந்த பூங்காவில் இந்து கடவுள் விநாயகர் நடனமாடுவது, வாத்தியங்கள் இசைப்பது, புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட தோற்றங்களில் மாமல்லபுரம் தனியார் சிற்பக் கூடங்களில் கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டு இப்பூங்காவில் நிறுவப்பட்டன. இந்நிலையில் 16-ம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்து மறைந்த அந்நாட்டு பண்டைய செல்டிக் கலாச்சார தத்துவஞானியும், மதகுருவான ரூயிட்(வயது90) என்பவரின் 20 அடி உயர பைபர் சிலை அந்த தற்போது நிறுவப்பட உள்ளது. பைபர் மெட்டீரியலில் இச்சிலை மாமல்லபுரம் பொதுப்பணித்துறை சாலையில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
வலது கையில், பிரமிடில் உள்ள கழுகுடன் அமைந்துள்ள கோலை பிடித்து, இடது கையில் பாம்புகளை குவித்து காலடியில் குள்ளநரியை நிறுத்திய தோற்றத்தில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலைஞர் டி.வி.முருகன் என்பவருடன் 8 சிற்பக்கலைஞர்கள் கடந்த ஒரு வருடமாக இச்சிலையை வடிவமைத்துள்ளனர். அயர்லாந்து தத்துவ ஞானியை கண் முன் கொண்டு வந்து கலை நயத்துடன் அந்த சிலைக்கு உயிர்ப்பு உள்ளதுபோன்று பொலிவுடன் வடிவமைத்துள்ளனர்.
முன்னதாக முதலில் களிமண், அடுத்து பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவற்றில், வெவ்வேறு உருவங்களில் மாதிரி சிலை செய்யப்பட்டது. அயர்லாந்து பூங்கா தரப்பினர் மாதிரியை இறுதி செய்ததும் பைபர் மெட்டிரியலில் இச்சிலை வடிவமைக்கப்பட்டு முழுமை பெற்றுள்ளது. குறிப்பாக சிலை அளவிற்கேற்ப உலோக கம்பி பிரேம் தயாரித்து, அதன் மீது தனித்தனியாக செய்யப்பட்ட சிலையின் பாகங்களை பொருத்தி 20 அடி உயரம், 8 அடி அகலத்தில் முழு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டிற்கு விரைவில் சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அயர்லாந்து தத்துவஞானியின் சிலை அங்குள்ள பூங்காவில் நிறுவப்பட்டு அங்குள்ள சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இச்சிலையை கண்டுகளித்து, அவருடைய வரலாற்று தகவல்களை தெரிந்து கொள்ள பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாம்.