‘பிரியங்கா காந்திதான் வயநாடு மக்களுக்கான மிகச்சிறந்த பிரதிநிதி’ – ராகுல் காந்தி
1 min read
‘Priyanka Gandhi is the best representative of the people of Wayanad’ – Rahul Gandh
22.10.2024
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல்காந்தி அபார வெற்றி பெற்றார். அதேவேளை, ராகுல் காந்தி ஏதேனும் ஒரு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்தது.
இதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளை(புதன்கிழமை) பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ரோடு ஷோ (வாகன அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் சிறப்பான இடம் உள்ளது. பிரியங்கா காந்திதான் வயநாடு மக்களுக்கான மிகச்சிறந்த பிரதிநிதி. என் சகோதரியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
அவர் வயநாட்டின் தேவைகளில் ஆர்வமுள்ளவராகவும், நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, நாளை(23-ந்தேதி) எங்களுடன் இணையுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.