பிரதமர் மோடியை ஜெர்மன் அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் சந்தித்தார்
1 min read
German Chancellor Olaf Schalz met PM Modi
25.10.2024
3 நாட்கள் அரசு முறை பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்த அதிபர் ஓலாப்பை மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்
இந்நிலையில், அதிபர் ஓலாப் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவு, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுடெல்லியில் உள்ள எனது இல்லத்திற்கு வந்த எனது நண்பரான அதிபர் ஓலாப் ஸ்கால்சை நான் வரவேற்றேன். பின்னர் இந்தியா-ஜெர்மனி நட்புறவுக்கு வேகம் சேர்க்கும் பலதரப்பட்ட விஷயங்களை பற்றி விவாதித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. வளர்ச்சி ஒத்துழைப்பில் நமது நாடுகள் வலுவான சாதனை பதிவை கொண்டுள்ளன, இதை வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் ஓலாப் ஸ்கால்ஸ் உடனான சந்திப்பின்போது, உக்ரைன், மேற்கு ஆசியாவில் நடைபெறும் மோதல்கள் மிகவும் கவலையளிப்பதாகவும், போர் எதற்கும் தீர்வு அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அதோடு உக்ரைன், மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்தார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, 20-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட உலகளாவிய மன்றங்கள் 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை என்று தெரிவித்தார்.
இந்தியா-ஜெர்மனி இடையிலான உறவு என்பது வெறும் பரிவர்த்தனை அளவிலான உறவு அல்ல என்றும், இரண்டு திறமையான மற்றும் வலுவான ஜனநாயக நாடுகளின் கூட்டாண்மை என்றும் பிரதமர் மோடி கூறினார். இந்தியா-ஜெர்மனி இடையே பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஆற்றல், பசுமை மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்றும் மோடி தெரிவித்தார்.
ஜெர்மனி அறிவித்துள்ள ‘போகஸ் ஆன் இந்தியா’ திட்டத்தை வரவேற்ற பிரதமர் மோடி, ‘முழு அரசாங்கம்’ என்ற அணுகுமுறையில் இருந்து ‘முழு தேசம்’ என்ற அணுகுமுறைக்கு மாறும் வகையில் இந்தியாவும், ஜெர்மனியும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.