டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்
1 min read
TNPSC Group 4 exam results will be released soon
25.10.2024
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 8 ஆயிரத்து 932 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இந்த சூழலில் ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரும் 28-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்தாலோசித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டம் முடிவடைந்த சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.