வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
1 min read
New depression in Bay of Bengal in next 48 hours
9.11.2024
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 11, 12-ம் தேதிகளில் மேற்கு திசையில் தமிழகம் – இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவான காற்று சுழற்சியாகவோ அல்லது தாழ்வுப் பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.